உரத்த சிந்தனை: உயிர் பெறட்டும் உழவு: தேவ்.பாண்டே,சமூக ஆர்வலர்

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; சுழன்றும் ஏர்ப்பின்னது உலகு' என்றெல்லாம் கூறும் வள்ளுவர், "உழந்தும் உழவே தலை' என்கிறார்.

அதாவது, உழவுத் தொழிலில் கஷ்டங்கள் இருந்தாலும், உழவுதான் சிறந்த தொழில் எனக் கூறுகிறார்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட, விவசாயம் செய்வதில் நிறைய கஷ்டங்கள் இருந்திருக்கின்றன. 2000 ஆண்டு கணக்குப்படி, 100 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, 2011ல், 121 கோடியாக உயர்ந்துள்ளது.மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக, வேளாண்மையும், உணவு உற்பத்தியும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், ஒவ்வொரு வேளை உணவுக்கும், மக்கள் சண்டை போட்டுக் கொள்ள நேரிடும். பக்கத்து நாடுகளுக்கு இடையே, உணவுக்காக போர் ஏற்படலாம்.இந்திய நாட்டில், 60 சதவீதம் மக்கள், விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர், கிராமங்களிலேயே வாழ்கின்றனர்.

விவசாயமும், கிராமங்களும் இன்றைக்கு பெரிய நெருக்கடியில் உள்ளன.விவசாயம் செய்பவர்கள், பெரிய நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். இதனால், விவசாயிகள் கடனாளியாகின்றனர் அல்லது விவசாயத்தை விட்டு, வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர் அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர்.விவசாயம் செய்ய ஆர்வம் இல்லாமல் போனதற்கு காரணங்கள்: நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன; பழைய காலத்து விவசாய தொழில் முறையை, இன்றளவும் கடைபிடித்து வருவது; இலவச மின்சாரம் வழங்கினாலும், முறையற்ற மின்சார வினியோகம்; உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு, உரிய விலை இல்லாமை. உணவு பொருட்களை சேமிக்க, சரியான கிடங்கு வசதி இல்லாமை; காய், கனி, கிழங்கு, மலர்களை சேமிக்க, குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு இல்லாமை; விவசாய கூலி வேலைக்கு, ஆள் பற்றாக்குறை. இவ்வாறு பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

சமீபகாலங்களில், கிராமங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி பெருமளவு மக்கள் இடம் பெயர்கின்றனர். இதை தவிர்க்க வேண்டுமெனில், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தொழிலை, கிராமங்களில் தொடங்க வேண்டும். வேலை வாய்ப்பின்றி இருக்கும் விவசாயிகளை கொண்டே, தொழில் தொடங்க வேண்டும்.இதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது தான், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தில், அதே கிராம மக்களைக் கொண்டு, அதே கிராமங்களில் பாதைகளை சீர் செய்தல், ஏரிகள் தூர் வாருதல் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

இப்பணியை முறையாக கண்காணிப்பது கிடையாது. இவ்வேலைக்கு வருபவர்கள், காலையில் வேலை தொடங்கும்போது வருகையை காண்பித்துவிட்டு, வேலை செய்யாமல் நேரத்தை வீணடித்து, மாலையில் சம்பளத்தை வாங்கி சென்று விடுகின்றனர்.இப்படி சுலபமாக பணம் ஈட்டமுடிவதால், விவசாய வேலைக்கு ஆட்கள் வருவது கிடையாது. இதை தவிர்க்க வேண்டுமானால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளை, விவசாயம் நடைபெறாத நாட்களில், வேலை வழங்க வேண்டும். இதனால் கிராமப்புற மக்களுக்கு, விவசாய காலத்திலும், விவசாயம் நடைபெறாத காலத்திலும், வேலை வாய்ப்பு கிடைக்கும்.விவசாயம் இல்லாத பிற தொழிலுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட, விவசாய கூலிகளுக்கு கிடைக்கும் சம்பளம் குறைவு.

இதனால், கட்டட வேலை, கால்நடை பண்ணை வேலை, இதர வேலைக்கு விவசாய கூலிகள் சென்று விடுகின்றனர்.போதுமான மழை இல்லாததால், ஏரிப் பாசனம், ஆற்றுப் பாசனம் குறைந்து போய்விட்டது. இதற்கு மாற்றாக, ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனவசதி பெற வேண்டியுள்ளது. அதை தோண்ட, பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது.அப்படி இருந்தும், குறிப்பிட்ட காலத்தில் மின் இணைப்பு வழங்குவதில்லை. மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டாலும், தேவையான காலத்தில் வழங்குவது கிடையாது. இதனால் செலவு செய்து பயிரிடப்பட்டவை, கருகி நாசமாகி விடுகின்றன.விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் சீராக வினியோகிப்பது கிடையாது. தமிழகத்திற்கு, 47 ஆயிரம் டன், டி.ஏ.பி., உரம் தேவைப்படுகிறது. ஆனால், அதில் பாதி அளவான, 23 ஆயிரம் டன் உரம் மட்டுமே, மத்திய அரசு வழங்கியுள்ளது.விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விளை நிலங்களை வீட்டு மனைகளுக்காக விற்று விடுகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்திலும் கூட, விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கி வருகின்றனர்.விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், பிற பயன்பாட்டுக்கும் மாறிவருவது அதிகரித்து வருவதால், கடும் உணவு பஞ்சம் வரும் நாள், வெகு தொலைவில் இல்லை.

கர்நாடகத்தில், விளைநிலங்களை வேறு மாநிலத்தவர்கள் வாங்க தடை உள்ளது. அங்கு, விளை நிலங்களை வீட்டு மனையாக்க, கடுமையான சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.விவசாய நிலங்களை விளைவிக்காமல், தொடர்ந்து தரிசாக காட்டி விற்பனை செய்யும் மோசடியும் தமிழகத்தில் நடக்கிறது. வருவாய் துறையினரின் கடுமையான சட்டதிட்டங்களால், இவற்றை தடுக்க வேண்டும்.ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும், அவர்கள் வேலை பார்க்கும் கிராமத்திலேயே, தங்கி இருக்க வேண்டும் என்பது போல, ஒவ்வொரு விவசாயம் சம்பந்தப்பட்ட அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்தில் தங்க வைக்க வேண்டும்.எந்தெந்த பகுதியில் எவ்வளவு விவசாயிகள் உள்ளனர்; அவர்கள் சாகுபடி செய்யும் பயிர்கள் விவரம், சாகுபடி பரப்பு மற்றும் கால்நடைகளின் கணக்குகள், அரசிடம் சரியாக இருப்பதில்லை.இவ்வகையான புள்ளி விவரங்கள் இருந்தால்தான், சமச்சீரான உணவு பொருட்களை விளைவிக்க ஏற்பாடு செய்ய முடியும்.விவசாயம் மட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வளர்ப்பு, அதன்மூலம் பால் உற்பத்தி, கோழி பண்ணைகள், மீன் பண்ணைகள் வைத்துகொள்ள ஆலோசனை கூறி, பொருளாதாரத்தில் மேம்படுத்தலாம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்படும், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளை அலைக்கழிப்பது தடுக்கப்பட வேண்டும். நேரடி கொள்முதல் நிலையத்தின் வாசலில், வாரக்கணக்கில் நெல்மூட்டைகள் மேல், கட்டுச்சோற்றுடன் படுத்துக் கிடக்கும் விவசாயிகளை கண்கூடாகப் பார்க்கலாம்.விரைவு நெடுஞ்சாலை அமைக்க, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க என, நிறைய நிலங்களை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. "பொது நன்மைக்காக' என, பிடுங்கப்பட்ட நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு, மாற்று வேலை கிடைக்க, அரசு ஏதும் செய்து கொடுப்பது கிடையாது.

குஜராத் முதல்வரிடம் அம்மாநில மக்கள், ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். "குஜராத் மாநிலத்தில் நிலம் கையகப்படுத்தும்போது, அந்நிலத்தில் அமைக்கப்படும் நிறுவனத்திற்கு, நிலம் கொடுத்தவர்களையும் பங்குதாரராக சேர்த்துகொள்ள வேண்டும் அல்லது லாபத்தில் ஒரு பகுதியை நிலத்தை கொடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்' என்று.இவ்வாறு, தமிழகத்திலும் செய்தால், ஆர்வமுடன் நிலம் கொடுக்க வருவர். நிலம் கையகப்படுத்துவதால், நில உடமையாளர்களும் நஷ்டமடைய மாட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், தமிழக விவசாயிகளின் மேம்பாட்டுக்காக உலக வங்கி, 500 கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக, செய்திகள் கூறுகின்றன. இந்த 500 கோடி ரூபாய், எந்தந்த விவசாயிகளுக்கு, என்ன மேம்பாட்டுக்கு வழங்கப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா?

விவசாயம் செய்வதற்கு போதுமான நிலங்கள் இல்லாத நாடுகளெல்லாம், பயன்படாத நிலங்களை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஊடுபயிர் மூலம் விவசாயத்தை பெருக்கவும் திட்டமிடுகின்றனர்.ஆனால், நாமோ, ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், கார்பரேட் கம்பெனிகள் நடத்தவும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும், வளமிக்க விவசாய நிலங்களை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம். விவசாயத்தின் உயிர், ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதை காப்பாற்றுவது, அரசு மற்றும் மக்களின் கடமை. விவசாயம் என்ற தொழில் இல்லாமல் போனால், மக்களாகிய நம் நிலை என்ன என்பதை, நினைத்து பாருங்கள்.இ-மெயில்: dev.pandy@rediffmail.com
Tags: ,

கவனத்தில் கொள்க...

வேளாண் தகவல்கள் மற்றும் உதவிக்கு... அழையுங்கள் 7 708 709 710. வெளிநாடு- +91 7 708 709 710

0 கருத்துகள்

கருத்துக்களைச் சொல்லுங்கள்...