தாம்பரம் : கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தாம்பரம் தாலுகாவில் உள்ள தாம்பரம், சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பியுள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாகவே இந்த ஏரிகள் விரைவில் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளை நம்பி ஒரு காலத்தில் விவசாயம் நடந்து வந்தது. தற்போது விவசாயம் மறைந்து, அனைத்து விவசாய நிலங்களும் வீட்டு மனைகளாக மாறியுள்ளது. ஏரிகளிலும் பல ஏக்கர் பரப்பளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கம் உள்ளது. இங்கு சுமார் 105 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி ஒரு காலத்தில் 200ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று வந்தது. ஏரி ஆக்கிரமிப்பு, மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணமாக நாளடைவில் விவசாயம் மறைந்து விவசாய நிலம் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறின. தற்போது இந்த ஏரியில் 70ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளன. இந்த ஏரியின் கொள்ளளவு 10.75 மில்லியன் கன அடி ஆகும்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக உபரி நீர் வெளியேற முடியவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மாடம்பாக்கம் சாலை அருகே கே.வி.பள்ளியின் பக்கத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற பெரிய கால்வாய் வெட்டியுள்ளனர்.
இந்த கால்வாய் மூலம் மழைநீர் வீணாக சாலையிலும் அருகில் உள்ள காலிமனையிலும் செல்கிறது. இதுகுறித்து தாம்பரம் தாசில்தாரை கேட்டபோது ஏரியில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டியுள்ளனர் என்றார். ஆனால் இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்தான் இந்த செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கால்வாய் வெட்டியவர்கள் மீது போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 நவம்பர், 2011 அன்று 8:20 AM
rajakilpakkam lake has been systamatically encroached upon for the past thirty to forty years. successive govts may blame each other. but the fact remains why any govt has so far created a separate department like forest dept. to ensure protection of lakes. no doubt the forest area is to an extent safe guarded so far despite lot of pressure from selfish elements . why not the govt take action if so serious. simply putting the blame on revenue department which has been ineffective is not going to yeild results.